ஆர்.கே.நகர் தேர்தல்: 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போயுள்ளீர்கள் கமல்ஹாசன் விமர்சனம்

ஓட்டுக்கு பணம் பெறுவது பிச்சை எடுப்பது போன்ற கேவலம் என கமல்ஹாசன் கூறி உள்ளார். #RKnagarByElection #KamalHaasan
ஆர்.கே.நகர் தேர்தல்: 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போயுள்ளீர்கள் கமல்ஹாசன் விமர்சனம்
Published on

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவை நடிகர் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார். வாக்களிக்க பணம் வினியோகிக்கப்பட்டதையும், அதை வாக்காளர்கள் வாங்கியதையும் கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், ஆகப்பெரிய களங்கம். விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்று கூடச் சொல்ல மாட்டேன். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று... ஆர்.கே.நகரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருதரப்பும் விலை நிர்ணயித்தன. இருபதாயிரம் ரூபாய் அமவுன்ட்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா என்ற பார்புகழும் பாராட்டும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் உள்ளம் எவ்ளவு அழகான உலகம். உங்களின் அன்பும் அதன் வெளிப்பாடான நெகிழ்வும் என்ன செய்யும் என்பதைச் சென்னை வெள்ளத்தில் உங்களின் உதவிகள் மூலம் இந்த உலகத்துக்குக் காட்டினீர்களே, அப்படிப்பட்ட நீங்கள் தாம் இன்று 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போயுள்ளீர்கள்.

இது பிச்சை எடுப்பது போன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா? உங்களிடத்தில் மனிதம் இல்லாமல் இல்லை. ஆனால், வறுமை உங்களின் மனிதம் மறைத்து அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறது.

உங்களின் வறுமையை இல்லாமல் செய்ய, உங்களின் நேர்மையான வாக்குகள் தாம் ஒரே ஆயுதம். இந்த ஆயுதம் வேண்டுமானால் நீங்கள் பெற்ற டோக்கன்களைப் போல் இன்ஸ்டன்ட் இன்பம் அளிக்காமல் இருக்கலாம். ஆனால் நேர்மையாகச் செல்லும் உங்களின் வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத் தரும் என்பதை உணர்வீகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அடுத்து, ஒட்டுமொத்தத் தமிழக வாக்காளர்களுக்கான கேள்வி. ஆறாயிரம் கொடுத்த பின்பும் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு இல்லையே என்று சுயேச்சைக்குத் துணைபோன கறுப்பு ஆடுகளைக் கண்டு பிடித்து, கட்சியை விட்டு நீக்குகிறார்களாம் ஆளுகிறவர்கள். இந்தத் திருடன்-திருடன் விளையாட்டை எப்போது முடித்துக் கொள்வதாய் உத்தேசம் திருவாளர்களே? இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

#RKnagarByElection / #KamalHaasan

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com