

சென்னை,
'ஸ்டாண்ட் அப்' காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். ஓரிரு படங்களில் தலைகாட்டியுள்ள விக்கல்ஸ் விக்ரம் தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக களமிறங்குகிறார்.
அந்தவகையில் கே.சி.குரு தயாரித்து, இயக்கும் 'லைட் வெயிட் பேபி' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த லேடி பாடி பில்டரான ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பிரமோத் கோடியா ஒளிப்பதிவு செய்கிறார். சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார்.
இதுகுறித்து விக்கல்ஸ் விக்ரம் கூறுகையில், "இதுவரை படங்களில் என்னை துணை நடிகராகத் தான் அழைத்திருக்கிறார்கள். ஹீரோ ஆசை இருந்தாலும், சொல்வதற்கு வெட்கமாக இருக்கும். அந்த கனவு இப்போது நிஜமாகும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் என் முழு உழைப்பையும் கொட்டி நடிப்பேன். இது ரொமாண்டிக் காதல் கதை. ஒரு பெண் பாடி பில்டரை சுற்றி நடக்கும் கதை", என்றார்.
ஆர்த்தி கிருஷ்ணா கூறும்போது, "இது என்னுடைய முதல் படம். என்னுடைய முழுமையான பங்களிப்பை அளிப்பேன். எனக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்", என்றார்.