

கர்நாடக மாநிலம் பெலகாவியில் சிவன் அசோசியேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தியவர் சிவானந்த நீலண்ணவர். இவர், தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு ஆண்டுக்கு 36 சதவீத வட்டி தருவதாக கூறி இருந்தார். இதனால் பெலகாவி மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கோவா, மராட்டியத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர்.
மக்கள் முதலீடு செய்ததில் ரூ.2,400 கோடியை சிவானந்த நீலண்ணவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சிவானந்த நீலண்ணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைதான பின்பும் கடந்த 23 நாட்களில் ரூ.5 கோடிக்கும் மேல் ஏராளமானோர் அவரது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி முதலீடு செய்திருப்பதாக சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, தனது நிதி நிறுவனத்தை பிரபலப்படுத்தும் விதமாக நடிகைகளை அழைத்து சில நிகழ்ச்சிகளை சிவானந்த நீலண்ணவர் நடத்தி இருந்தார். அதன்படி, பிரபல நடிகையான சன்னி லியோன் கூட அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி இருந்தார். இதையடுத்து, நடிகை சன்னி லியோனிடம் விசாரித்து சில தகவல்களை பெற சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே அவருக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.