வெளியீட்டுக்கு முன்பே ரூ.665 கோடி லாபம்... ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு பெரும் வரவேற்பு

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் இப்படம், வருகிற டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது.

வெளியீட்டுக்கு முன்பே ரூ.665 கோடி லாபம்... ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு பெரும் வரவேற்பு
Published on: 

சென்னை,

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே ரூ.665 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் வெளியீடு

‘பதான்’ படத்துக்குப் பிறகு ஷாருக்கானும், இயக்குநர் சித்தார்த் ஆனந்தும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘கிங்’. இதில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கான், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் இப்படம், வருகிற டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளும் தொடங்கியுள்ளன.

உரிமைகள் மூலம் குவிந்த வருவாய்

இதற்கிடையில் இப்படம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமைகள், ஓ.டி.டி., தொலைக்காட்சி மற்றும் இசை உரிமைகள் மூலம் இந்தத் தொகையை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், இந்திய திரையரங்கு விநியோக உரிமையை பென் மருதர் நிறுவனம் ரூ.250 கோடிக்கும், வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.175 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓ.டி.டி. உரிமையை ரூ.150 கோடிக்கு பெற்றுள்ளதாகவும், தொலைக்காட்சி உரிமை ரூ.25 கோடிக்கும், இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.665 கோடியாகும்.

ரூ.800 கோடி வசூல் இலக்கா?

‘கிங்’ திரைப்படம் முதலில் சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டதாகவும், பின்னர் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புச் செலவுகள் அதிகரித்து ரூ.400 கோடியை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளம்பரம் மற்றும் வெளியீட்டுச் செலவுகளையும் சேர்த்தால், மொத்த செலவு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதனால், படத்தின் வியாபாரம் ரூ.665 கோடியை எட்டியிருந்தாலும், விநியோகஸ்தர்கள் முதலீட்டை மீட்டெடுக்கவும் லாபம் பெறவும் உலகளவில் சுமார் ரூ.800 கோடி வசூல் தேவைப்படலாம் என வர்த்தக வட்டாரங்கள் கணிக்கின்றன. இருப்பினும், இவை வெளியான வியாபாரத் தகவல்களின் அடிப்படையிலான மதிப்பீடுகளே தவிர, உறுதிப்படுத்தப்பட்ட லாபக் கணக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

X