''டாக்சிக்'', ''காந்தாரா'' பட அப்டேட் கொடுத்த ருக்மிணி வசந்த்

தமிழில் விஜய் சேதுபதியின் ''ஏஸ்'' படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மிணி வசந்த்.
சென்னை,
தற்போது வெளியாகி இருக்கும் ''மதராஸி'' படத்தின் மூலம் இளைஞர்களின் இதயங்களை வென்றிருக்கும் நடிகை ருக்மிணி வசந்த். இவர் கடந்த 2019-ம் ஆண்டு "பிர்பால்" என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் விஜய் சேதுபதியின் ''ஏஸ்'' படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் ரூ. 100 கோடி வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இதுமட்டுமில்லாமல், ருக்மிணி ''காந்தாரா சாப்டர் 1'' படத்திலும், ''டாக்சிக்'' படத்திலும் நடித்து வருகிறார். இதில், 'காந்தாரா சாப்டர் 1' அடுத்த மாதம் 2-ம் தேதியும், 'டாக்சிக்' அடுத்த ஆண்டு மார்ச் 19-ந் தேதியும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இவ்விரும் படங்கள் பற்றியும் ருக்மிணி அப்டேட் கொடுத்திருக்கிறார். நேர்காணல் ஒன்றில் அவர் கூறுகையில், ''டாக்சிக்' படம் பற்றி இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. ‘காந்தாரா’ படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம். ஒரு நடிகையாக எனக்கு முக்கியமான கதாபாத்திரம் இதில் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. என்மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.






