

சென்னை
இயக்குனர் பாரதிராஜாவின் 'கடலோர கவிதைகள்' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேகா. 1980 மற்றும் 90-ளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர் பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது ஜி.வி.பிரகாசின் '100 பர்சண்ட் காதல்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ரேகா கூறியதாவது:-
ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் என பலரும் பஞ்ச் வசனங்கள் பேசுவார்கள். நான் பஞ்ச் வசனங்கள் பேசும் அளவுக்கு பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல.
உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்று நடிகர் விஜய் சொன்னதுபோல் நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால் நான் உயிரோடு இல்லை என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி உள்ளனர்.
என்னை உயிரோடு புதைத்து அருகில் ரஜினியும் விஜய்யும் எட்டிபார்ப்பது போல் டிசைன் செய்து அந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்றைய காலத்தில் பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் யூடியூப் சேனல் நடத்துகின்றனர். அவற்றில் தவறான தகவல்களை வெளியிட்டு வருமானம் பார்க்கிறார்கள். இவற்றின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது செய்தி தொடர்பான வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. ஆனால், பிரபலங்கள் இறந்துவிட்டால் அதை எட்டி பார்ப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் இறந்துவிட்டோம் என்று நாமே விளம்பரப் படுத்துவோமா?. நான் செத்து போய்விட்டேன் என்று நானே எப்படிச் சொல்ல முடியும். இதை எல்லாம் கேட்காமல் இருப்பதால் தான் அதை வைத்து பணம் பார்க்கிறார்கள்.
எனக்கு போன் செய்து சில நடிகர்கள் நீ இறந்து விட்டாயா என்று கேட்டனர். ஆமாம் இப்போது பேயாகத்தான் பேசுகிறேன் என்றேன். இது வேதனையாக இருக்கிறது. நான் கணவர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். தேசிய விருது வாங்கும் ஆசையில் இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன் இவ்வாறு ரேகா கூறினார்.