

சென்னை,
நடிகர் யாஷ் தற்போது இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் நாடக கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக 'டாக்ஸிக்' உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 'டாக்ஸிக்' படத்திற்காக மிகப்பெரிய அளவில் மறுபடப்பிடிப்பு நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. படத்தின் சில காட்சிகள் யாஷுக்கு திருப்தி அளிக்காததால், சுமார் 100 நாட்கள் வரை மறுபடப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தயாரிப்பாளருக்கு கூடுதலாக ரூ.40 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'டாக்ஸிக்' திரைப்படத்திற்காக எந்தவிதமான மறுபடப்பிடிப்பும் திட்டமிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதன்மூலம் சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தற்போது படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.