

கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தங்கம் திருடப்பட்டதாக எழுந்த புகார், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை சன்னிதானம் அருகே உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கக் கவசம் பராமரிப்பு பணிக்காக எடுக்கப்பட்டது. இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு அந்த கவசங்களை ஒப்படைத்தபோது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்ட பிறகு, சென்னை நிறுவனத்தால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபோது அதன் எடை 38.26 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது, 4.54 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. . இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த மாநில காவல் துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கு சென்னையில் தங்க மூலாம் பூசியபோது சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்கு அவை எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடித்தப்பட்டன. இதுதொடர்பாக நடிகர் ஜெயராமிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழு அண்மையில் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், அமலாக்கத் துறை சார்பில் நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்மனை ஏற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.