

சென்னை,
நடிகர் தனுஷ், மம்முட்டி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக நடிகை சாய் பல்லவி தனது தலைமுடியை வெட்டியுள்ளார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் ஆச்சரியமடைந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'ஓம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது தோற்றத்தையே மாற்றியுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி கூறியதாவது: கதாபாத்திரத்திற்காக மட்டுமே தலைமுடியை வெட்டினேன். வேறு எந்தப் படத்திற்காகவும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டேன். தலைமுடியை வெட்டிய பிறகு தனது தாயாருக்கு வீடியோ கால் செய்தேன். தனது புதிய தோற்றத்தைப் பார்த்த அவர் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டார். தந்தைக்கு வீடியோ கால் செய்தபோது, அவர் ஆச்சரியத்துடன், "பல்லவி, இது விக் தானே?"என்று கேட்டார். தான் உண்மையிலேயே தலைமுடியை வெட்டியிருப்பதாகக் கூறிய பிறகுதான் அவர் நம்பினார். அதன்பிறகு, தனது தாயாருக்கும் எடுத்துக் கூறி சமாதானப்படுத்தினேன்.:” என்றார்.
ஓம் படத்தில் சாய் பல்லவியின் தோற்றத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரி மெரின் ஜோசப்பின் புகைப்படங்களை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி முன்மாதிரியாகக் காட்டியுள்ளார். அவரது தோற்றத்தைப் பெற தலைமுடியை வெட்ட வேண்டும் என்று இயக்குநர் கூறியதைத் தொடர்ந்து சாய் பல்லவியும் அதற்கு சம்மதித்துள்ளார். படத்தில் சாய் பல்லவியின் சண்டைக் காட்சிகளை நடிகர் மம்முட்டி பாராட்டியுள்ளார். தனுஷும் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.