

சென்னை,
ராவணன் முழுக்க கெட்டவன் இல்லை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, இந்திய கலாசாரம் மற்றும் இதிகாசங்களை உலக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இப்படம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். மேலும், ராமாயணத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களுக்கான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், நம்மிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்களை ஆராய்ந்து, தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதுகுறித்து அவர் பேசுகையில், “ராவணன் முழுக்க கெட்டவன் இல்லை. நமக்குள் இருக்கும் ராவணனை அடையாளம் கண்டு, காலப்போக்கில் நம்மை மாற்றிக்கொள்வது முக்கியம்” என்று தெரிவித்தார்.
சாய் பல்லவியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் மாறுபட்ட எதிர்வினைகள் வெளியாகின. சிலர் சாய் பல்லவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர், ராவணனைப் புகழ்வது அவரது நோக்கம் அல்ல என்றும், ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தீய குணங்களை அடையாளம் கண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தின் பொருள் என்றும் ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறாக நெட்டிசன்கள் இடையே சாய்பல்லவி கருத்து பற்றி காரசார விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகிறது.
சீதையாக சாய் பல்லவி நடிப்பது குறித்த விவாதங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் நடைபெற்று வரும் நிலையில், அவரது இந்தக் கருத்தும் கவனம் பெற்றுள்ளது. ராமாயணா படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது