நடிகர் சயிப் அலிகான் கத்திக்குத்து சம்பவம் - பொருந்தாத கைதான நபரின் கைரேகை!


நடிகர் சயிப் அலிகான் கத்திக்குத்து சம்பவம் - பொருந்தாத கைதான நபரின் கைரேகை!
x

நடிகர் சயிப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள், குற்றம்சாட்டப்பட்ட முகமது இஸ்லாமின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயிப் அலிகான். இவர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிப் அலிகான் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார். இதனால் படுகாயம் அடைந்த சயிப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததாகவும், முதுகு தண்டில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் முதுகெலும்பு திரவம் கசிந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த 21ம் தேதி நடிகர் சயிப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவரும் அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர்.

அந்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டு எழுந்ததாகவும், அந்தச் சத்தம் தனது மகனின் அறையில் இருந்த வந்ததால் அங்கு சென்றதாகவும், அப்போது மகன் அழுதுகொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் தன்னை திடீரென தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமான வங்கதேச நபரான முகமது இஸ்லாமை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சயிப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில், குற்றம்சாட்டப்பட்ட முகமது இஸ்லாமின் கைரேகைகளுடன் எந்த கைரேகையுமே பொருந்தவில்லை என உயர்மட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட கைரேகை மாதிரிகளை மும்பை காவல் துறை, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், அங்கு ஆய்வு செய்யப்பட்டதில் எந்த கைரேகையும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முகமது இஸ்லாம் கைரேகையுடன் பொருந்தவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது, மும்பை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கூடுதல் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சயிப் அலிகான் வீட்டின் குழாய் மூலமாகவே குற்றம்சாட்டப்பட்ட நபர் 11வது மாடிக்கு ஏறியதாகவும் அந்த குழாயில் இருந்தே கைரேகைகள் எடுக்கப்பட்டதாகவும் போலீஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story