

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
இவர் கடந்த 2025ம் ஆண்டு லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட் என்னும் தலைப்பில் தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதனை தொடர்ந்து புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து துபாயில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். வருகிற மே 30ம் தேதி சென்னையில் பிரமாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்த உள்ளார்.
இசைஞானி இளையராஜா மற்றும் கர்நாடக சங்கீத இசைப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியன் ஆகிய இருவரும் முதன்முறையாக கைகோர்த்துள்ளனர்.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் 20 பாடல்கள், திருப்பள்ளியெழுச்சியின் 10 பாடல்கள் என மொத்தம் 30 பாடல்களுக்கு இளையராஜா வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடல்களுக்குச் சஞ்சய் சுப்ரமணியன் இசையமைத்து, தனது குரலால் உயிர் கொடுத்துள்ளார்.
பொதுவாகப் பழங்கால மெட்டுகளில் பாடப்படும் இந்தப் பாடல்கள், தற்போது இளையராஜா - சஞ்சய் சுப்ரமணியன் கூட்டணியில் புதிய இசைப் பரிமாணத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுத் தயாராக உள்ள நிலையில், மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தின் சிறப்பைக் கூறும் திருவெம்பாவை மற்றும் இறைவனைத் துயில் எழுப்பும் திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.