

திருவனந்தபுரம்,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், கேரளத்தைச் சேர்ந்த பிரபலங்களில் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டவராக இருந்து வந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.88 கோடி பின்தொடர்பவர்கள் (FOLLOWERS) உள்ளனர்.
இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை கீர்த்தி சுரேஷ் வைத்திருந்த சாதனையை முறியடித்து, கேரள பிரபலங்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டவராக சஞ்சு சாம்சன் முன்னிலை பிடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சனின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1.4 கோடி ஆக இருந்தது. உலகக்கோப்பை போட்டிகளில் அவர் காட்டிய சிறப்பான ஆட்டம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக, அவரது பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து, உலகக்கோப்பை காலத்தில் 1.78 கோடி ஆக உயர்ந்தது. தற்போது அது மேலும் அதிகரித்து 1.91 கோடி பின்தொடர்பவர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி, சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் திறமை மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் அவருக்கான ரசிகர் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.