ஆள் தெரியாமல் பாராட்டிய ரசிகர் - கவனத்தை ஈர்த்த சந்தோஷ் நாராயணனின் பதிவு

சந்தோஷ் நாராயணன் அடிக்கடி தனக்கு நடக்கும் சுவாரசியமான தகவல்களை சமூக வலைதளத்தில் பகிருவது வழக்கம்.
சென்னை,
'அட்டகத்தி', 'சூது கவ்வும்', 'ஜிகர்தண்டா', 'இறுதிச்சுற்று', 'இறைவி', 'கர்ணன்', 'சார்பட்டா', 'வாழை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார், சந்தோஷ் நாராயணன்.
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ' படத்தில் அவரது இசை பேசப்பட்டது. கனிமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
இதற்கிடையில் சந்தோஷ் நாராயணன் அடிக்கடி தனக்கு நடக்கும் சுவாரசியமான தகவல்களை சமூக வலைதளத்தில் பகிருவது வழக்கம். அந்தவகையில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதில், ''நான் கொழும்புவில் உள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளம் ரசிகர் என்னை நோக்கி ஓடி வந்தார். செல்பி எடுக்கும் நோக்கில் செல்போனையும் அவசரம் அவசரமாக எடுத்தார்.
என்னை பார்த்து, 'உதித் நாராயணன் சார்... உங்கள் பாட்டு எனக்கு உயிர்' என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை பாடகராக அவர் அங்கீகரித்ததை நினைத்து...'', என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆள் தெரியாமல் பாராட்டி செல்பி எடுத்து சென்ற ரசிகரின் செயலை நகைச்சுவையாக சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது.