

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.
விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அயோத்தி’ திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் புதிய படத்திற்காக சசிகுமார் இணைந்துள்ளார்.
இத்திரைப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் இணைந்து சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இணைத் தயாரிப்பில் கிரிஷ் கே. நகரேச்சா ஆகியோரும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சய் விஜயராகவன், ஆதரவு நிறுவனம் 6 டைமென்ஷன்ஸ் பிலிம் அண்ட் மீடியா ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஹரிஷ் சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர், நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
தற்காலிகமாகப் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு முறையாக நடைபெற உள்ளது.