4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி… மகள் திவ்யாவின் பதிவு வைரல்

சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி… மகள் திவ்யாவின் பதிவு வைரல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்.

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். அவருக்கு சமகால நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜ் டிரெண்டுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததற்கு பின் அவருக்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இருவரும் 38 வருடங்களுக்கு பின்னர் இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதுதவிர ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் சத்யராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சத்யராஜ் மகன் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது அம்மா குறித்து திவ்யா இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் "என் அம்மா மகேஸ்வரி கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு பிஜி டியூப் மூலம் உணவளித்து வருகிறோம். மருத்துவ முன்னேற்றத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். என் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நம்புகிறோம். கடந்த நான்கு வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருக்கிறார். அப்பாவின் அம்மாவும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். நானும் என் அப்பாவுக்கு ஒரு சிங்கிள் மதராக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து பவர்புல்லான சிங்கிள் பேரண்ட் கிளப்பை உருவாக்கி உள்ளோம். " என திவ்யா சத்யராஜ் மிக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மகேஸ்வரி கோமாவுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அம்மா குறித்து திவ்யா வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், அவர் விரைவில் குணமடைந்துவிடுவார், அதற்காக வேண்டிக்கொள்கிறோம் என கமெண்டில் கூறி வருகிறார்கள்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com