

கடந்த 2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ’ (பயோபிக் ஆப் பில்லியன் பாய்ஸ்). இப்படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக ''ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'', ''குருவாயூர் அம்பல நடையில்'' உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.
சவின் இயக்கிய ‘வாழ’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் விபின் தாஸ் தயாரித்திருந்தார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கு ‘வாழ 2’ (பயோபிக் ஆப் பில்லியன் புரோஸ்) எனப்பெயரிடப்பட்டது. இப்படம் கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளியானது. பள்ளிகால கதையாக உருவான இது பலரிடமும் நகைச்சுவை, நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.
இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரைவில் தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘வாழ 2’ படம் 28 நாட்களில் ரூ.235 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மோகன்லாலின் ‘தொடரும்’ படத்தின் வசூலை முந்தியுள்ளது.
சமீபத்தில் விஸ்வன் ஸ்ரீஜித் இயக்கத்தில் ‘வாழ’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.