

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது வார் மற்றும் பதான் படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் - தீபிகா படுகோனே கூட்டணியில் உருவாகும் 6-வது படம் இது என்பதால், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் கிங் படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் ஷாருக்கான் - தீபிகா படுகோனே இடையேயான காதல் - ரொமான்ஸ் காட்சிகள், நடன காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த காட்சிகள் நேற்று இணையதளத்தில் வெளியானது.
இது படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. 52 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காட்சிகளும் உரிய நடவடிக்கைகளின் பேரில் உடனடியாக நீக்கப்பட்டது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க படக்குழு சார்பில் அரசுக்கு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.