கனடாவில் இந்திய திரைப்படங்களுக்கான காட்சிகள் ரத்து... என்ன காரணம்?


கனடாவில் இந்திய திரைப்படங்களுக்கான காட்சிகள் ரத்து... என்ன காரணம்?
x

கனடாவின் ஓன்டாரியோ மாகாண திரையரங்குகளில் இந்திய திரைப்படங்களுக்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள பிலிம் சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்கின் மீது, கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்ததுடன், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். மேலும், ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிரபல திரையரங்கின் மீதும் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.பெரும்பாலும், இரவுகளில் மட்டுமே நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கனடாவின் பல்வேறு முக்கிய நகரங்களில், இந்திய திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகளைக் குறிவைத்தே நடத்தப்படுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்திய திரைப்படங்களைத் திரையிடப்போவதில்லை என அறிவித்துள்ளன. காந்தாரா சாப்டர் 1 மற்றும் ஓஜி ஆகிய இந்திய படங்களின் திரையிடலை காலவரையின்றி ரத்து செய்வதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு கனடாவில் உள்ள இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறை சம்பவத்திற்கு கனடா வெளியுறவு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story