

சென்னை,
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் 4 வார இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாக படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவான 'ஹேப்பி ராஜ்' திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். மேலும், அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அப்பா-மகன் பாசம் மற்றும் காதலை மையமாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படமாக இது வெளியானது.
இந்தப் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பாடலை தனது அனுமதியின்றி உருமாற்றம் செய்து பயன்படுத்தியுள்ளதாகவும், அது தனது காப்புரிமையை மீறுவதாகவும் இசையமைப்பாளர் இளையராஜா குற்றம்சாட்டினார். எனவே, அந்தப் பாடலை பயன்படுத்த தடை விதிக்கவும், படத்தில் இருந்து அதை நீக்க உத்தரவிடவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம். குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை பயன்படுத்துவதற்கு 4 வார இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.