

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்த நிலையில் நடிகை தமன்னாவிடம் நடிகைகள் மீ டூவில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறுவது குறித்தும் பட உலகில் உங்களுக்கு இதுபோல் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டு உள்ளதா? என்றும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
சில நடிகைகள் பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றச்சாட்டு சொல்லி வருகிறார்கள். ஒரு படத்தை உருவாக்க எத்தனையோ கோடிகளை செலவு செய்கிறார்கள். அந்த படத்தில் நிறைய நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பந்தப்பட்டு இருப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில் கேவலம் இப்படி கதாநாயகியை ஆசைக்கு இணங்க அழைப்பார்கள் என்று நான் நம்ப மாட்டேன்.
எனக்கு இதுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை. அவ்வளவு பணத்தை போட்டு படம் எடுக்கும்போது இந்த மாதிரி வேலைகள் செய்வார்கள் என்று கற்பனையில் கூட என்னால் யோசிக்க முடியவில்லை. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதல் திருமணமா? பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணமா? என்று பலரும் கேட்கிறார்கள். வாழ்க்கையில் நாம் நினைத்தது மாதிரி எதுவும் நடப்பது இல்லை. பார்க்கலாம்.
இவ்வாறு தமன்னா கூறினார்.