துபாயில் ஷாருக்கான் பெயரில் கட்டப்படும் பிரமாண்ட கட்டடம்

தனது பெயர் துபாயின் முக்கிய பகுதியாக உருவாகவுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக, நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துபாயில் , ஷேக் சயீத் சாலையில் கட்டப்படவுள்ள மாபெரும் வணிகக் கட்டடத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயர் சூட்டப்படும் என துபாயைச் சேர்ந்த டானூப் குழு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷாருக்ஸ் எனப் பெயர் சூட்டப்படவுள்ள இந்தக் கட்டடம் சுமார் 56 தளங்களைக் கொண்டிருக்கும் எனவும், இதன் கட்டுமானப் பணிகள் வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தக் கட்டடத்தின் நுழைவாயிலில் நடிகர் ஷாருக்கானின் பிரபல போஸில் அவரது சிலை ஒன்றை வைப்பதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனது பெயர் துபாயின் முக்கிய பகுதியாக உருவாகவுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக, நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் “துபாய் நகரத்தின் முக்கிய பகுதியாக அமையப்போகும் ஒரு கட்டடத்திற்கு எனது பெயர் சூட்டப்படும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கனவுகள், வாய்ப்புகள் அனைத்தும் கொண்டாடப்படும் துபாய் எனக்கு என்றும் சிறந்த இடமாகும். நம்பிக்கையும் கடின உழைப்பும் உங்களை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்பதற்கு ஒரு சின்னமாக டானூப் நிறுவனத்தின் ஷாருக்ஸ் கட்டடம் இருக்கும்” என ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.






