'நம்பமுடியாத பயணம்' - ஷாலினி பாண்டே

தனது சினிமா பயணத்தை ஷாலினி பாண்டே நினைவுகூர்ந்திருக்கிறார்
சென்னை,
தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தை தொடர்ந்து 100 சதவீதம் காதல், கொரில்லா, மகாநதி, சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'மகாராஜ்'படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் 'டப்பா கார்டெல்' என்ற வெப் தொடரில் ஷபானா ஆஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன் மற்றும் அஞ்சலி ஆனந்த் ஆகியோருடன் நடித்திருக்கிறார். கடந்த மாதம் 28-ம் தேதி வெளியான இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தனது சினிமா பயணத்தை ஷாலினி பாண்டே நினைவுகூர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில்,
'எனது பயணம் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது. நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது. நான் ஒரு நடிகை, அதனால் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும், அப்போதுதான் என்னால் வளர முடியும். இந்தப் பயணம் என்னை இங்கிருந்து எங்கு அழைத்துச் செல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ' என்றார்.






