திருமணம் என்ற பெயரில் 4 மாதங்கள் பயன்படுத்தி கொண்ட ஷீஜன் கான்: நடிகை துனீஷாவின் தாயார் பரபரப்பு பேட்டி

நடிகை துனீஷாவை திருமணம் என்ற பெயரில் ஷீஜன் கான் 4 மாதங்கள் பயன்படுத்தி கொண்டு மோசடி செய்து விட்டார் என நடிகையின் தாயார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
திருமணம் என்ற பெயரில் 4 மாதங்கள் பயன்படுத்தி கொண்ட ஷீஜன் கான்: நடிகை துனீஷாவின் தாயார் பரபரப்பு பேட்டி
Published on

புனே,

பிரபல நடிகை துனீஷா சர்மா, அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் வாலிவ் நகர போலீசார், சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி வாலிவ் போலீசார் கூறும்போது, படப்பிடிப்பின்போது, தேநீர் இடைவேளையில் நடிகை துனீஷா கழிவறைக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த தகவல் கிடைத்து நாங்கள் சென்று, கதவை உடைத்து சென்றோம்.

இதில், துனீஷா தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என கூறினர். இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் கூறினர்.

இந்நிலையில், தொடரில் நடித்து வரும் சக நடிகரான ஷீஜன் கான் என்பவர் மீது துனீஷாவின் தாயார் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷீஜன் கானை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகர் ஷீஜன் கானை 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது. அவர், வாலிவ் போலீசாரிடம் விசாரணையில் கூறும்போது, ஷ்ரத்தா வாக்கர் கொடூர சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் காணப்படும் சூழ்நிலை மற்றும் அதன் பின்விளைவுகளை பார்த்தும் மற்றும் நமக்கு முன்பு தடங்கலாக இருக்கும் வெவ்வேறு சமூகம், வயது வித்தியாசம் ஆகியவற்றையும் துனீஷாவிடம் எடுத்து கூறினேன்.

அதனால், இந்த உறவை முறித்து கொள்ள முடிவு செய்தேன் என்று போலீசில் கூறியுள்ளார். இருவரும் பிரிந்த பின்னர், ஒரு முறை துனீஷா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுபற்றி ஷீஜன் கான் கூறும்போது, துனீஷா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், அந்த நேரத்தில் நான் அவரை காப்பாற்றினேன். அதன்பின் துனீஷாவின் தாயாரிடம் அவரை நன்றாக கவனித்து கொள்ளும்படி கூறினேன் என்றும் போலீசில் கூறியுள்ளார்.

துனீஷா தற்கொலை செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனீஷாவை தற்கொலைக்கு இட்டு சென்ற விசயம் என்ன?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகை துனீஷாவின் தாயார் வனிதா சர்மா, நடிகர் ஷீஜன் கான் மீது இன்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர் கூறும்போது, துனீஷாவை ஷீஜன் கான் ஏமாற்றி விட்டார். துனீஷாவுடன் முதலில் பழக தொடங்கிய ஷீஜன் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். பின்னர் உறவை முறித்து கொண்டார்.

துனீஷாவுடன் பழகும்போதே அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்துள்ளது. துனீஷாவை 3 முதல் 4 மாதங்கள் வரை ஷீஜன் கான் பயன்படுத்தி கொண்டார். அவரை போலீசார் தப்ப விட கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை துனீஷா முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். தவிர, இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் தொடர் தவிர, இந்தி திரைப்படங்களான பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங் மற்றும் தபாங் 3 ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com