

சென்னை,
சிவா கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழ் படம் 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தமிழ் படம்’. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம், தமிழ் சினிமாவில் நிலவும் வழக்கமான காட்சிகளையும், திரைப்படங்களையும் நகைச்சுவையாகக் கிண்டல் செய்து ரசிகர்களைக் கவர்ந்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘தமிழ் படம் 2’ உருவானது. இதில் சிவாவுடன் சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரண்டாம் பாகமும் பல திரைப்படங்களையும், சினிமா பாணிகளையும் பகடி செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து, இப்படத்தின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தற்போது ‘தமிழ் படம் 3’ உருவாகிறது. இதன் மூலம் சிவா மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார்.
சி.எஸ். அமுதன் இயக்கும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். பாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்கள், பான் இந்தியா படங்கள், சினிமா யுனிவர்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகும் டிரெண்டுகள் உள்ளிட்டவற்றை நகைச்சுவையாகக் கிண்டல் செய்யும் வகையில் இப்படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தமிழ் படம் 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ். சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
முதல் இரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம் பாகத்திலும் சமகாலத் திரைப்படங்களையும், சினிமா உலகின் போக்குகளையும் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘தமிழ் படம் 3’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.