கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்
Published on: 

சென்னை,

கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படம் உருவாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைவதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் படத்தை இயக்கும் அருண் குமார்

இந்நிலையில், கமல்ஹாசன் தயாரித்து நாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தை, இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். இவர் சித்தா, வீரதீர சூரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'சண்டியர்' என பெயரிடப்பட்டுள்ளது.

சண்டியர் - விருமாண்டி

கமல் இயக்கி நடித்த 'விருமாண்டி' திரைப்படம் கடந்த 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்கு முன்னதாக வைக்கப்பட்ட டைட்டில் ‘சண்டியர்'. ஆனால், அந்த தலைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'சண்டியர்' தலைப்பு சர்ச்சை காரணமாக 'விருமாண்டி' எனப் பெயர் மாற்றியிருந்தார் கமல். இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பெயரில் புதிய படத்தில் கமல் நடிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த தருணம் விசேஷமானது.

இந்த தொடக்கம் பிரம்மாண்டமானது. ‘சண்டியர்’ – படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது!” என்று பதிவிடப்பட்டுள்ளது.

X