'அவர்களை நல்ல முறையில் காட்டுவதா..?'- பதான் திரைப்படம் குறித்து நடிகை கங்கனா கடும் விமர்சனம்

பதான் திரைப்படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானை நல்ல முறையில் காட்டியிருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.
'அவர்களை நல்ல முறையில் காட்டுவதா..?'- பதான் திரைப்படம் குறித்து நடிகை கங்கனா கடும் விமர்சனம்
Published on

மும்பை,

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் என்பதால், அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பதான் திரைப்படம் குறித்து தனது விமர்சனத்தை நடிகை கங்கனா ரனாவத் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பதான் திரைப்படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானை நல்ல முறையில் காட்டியிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் தனது பதிவில் கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது;-

"பதான் திரைப்படம் 'வெறுப்பை வீழ்த்திய அன்புக்கு கிடைத்த வெற்றி' என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் யாருடைய வெறுப்பின் மேல் யாருடைய அன்பு வெற்றி பெற்றது? டிக்கெட்டுகளை வாங்கி படத்தை வெற்றி பெறச் செய்வது யார்? ஆம், அதுவே அனைவரையும் உள்ளடக்கிய தன்மையோடு, 80 சதவீத இந்துக்கள் வாழும் இந்தியாவின் அன்பு.

ஆனால் பதான் என்ற திரைப்படம் நமது எதிரி நாடான பாகிஸ்தானையும், ஐ.எஸ்.ஐ.எஸ்.-யும் நல்ல முறையில் காட்டுகிறது. வெறுப்பு மற்றும் தீர்மானங்களுக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் இந்த மனப்பான்மைதான் அதை சிறப்பாக்குகிறது. வெறுப்பையும், எதிரிகளின் அற்ப அரசியலையும் வென்றது இந்தியாவின் அன்புதான்.

அதிக நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் கவனிக்கவும்... பதான் ஒரு நல்ல திரைப்படமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஜெய் ஸ்ரீ ராம் என்பது மட்டுமே எதிரொலிக்கும்.

இந்திய முஸ்லீம்கள் தேசபக்தர்கள், ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள் என்று நான் நம்புகிறேன். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தானாக இருக்காது, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும், அங்கு நரகத்தை விட மோசமாக இருக்கிறது. எனவே அதன் கதைக்களத்தின்படி பதான் திரைப்படத்திற்கு பொருத்தமான பெயர் 'இந்தியன் பதான்' என்பதே ஆகும்."

இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com