மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன்

தமிழில் அரவான், சிநேகிதியே, துணை முதல்வர், நான் அவனில்லை 2 ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன்.
மலையாளத்தில் 1990களில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன். மலையாளத்தில் மட்டுமல்லாமல் இந்தியிலும் பெரும்பாலான ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவான், சிநேகிதியே, துணை முதல்வர், நான் அவனில்லை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது சிறப்பான நடிப்புக்காக கேரள மாநில அரசின் விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்சியாக பங்கேற்று வருகிறார்.
மலையாள நடிகர் சங்கமானது, 'அம்மா' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதம் வரை மோகன்லால் இதன் தலைவராக இருந்தார். பாலியல் குற்றச்சாட்டு, அது தொடர்பாக நீதிபதி ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் தாக்கம் போன்றவற்றால், மோகன்லால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். நடிகர் சங்கத்தின் மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில், மீண்டும் மோகன்லால் பெயர் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டது. ஆனால் மோகன்லால் இனி தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட, மலையாள நடிகை ஸ்வேதா மேனனும் விண்ணப்பம் அளித்திருக்கிறார். இவர் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நேரத்தில், நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அதோடு பொதுக்குழுவில் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று கூறியவர்களில் இவரும் ஒருவர். மோகன்லால் விலகியதைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு போட்டியிட பலரும் விண்ணப்பித்த நிலையில், தற்போது ஸ்வேதா மேனனும் விண்ணப்பம் அளித்திருக்கிறார்.






