“சிக்மா” படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் - இயக்குநர் ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31 வெளியாகவுள்ளது.
“சிக்மா” படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் - இயக்குநர் ஜேசன் சஞ்சய்
Published on

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் “ ‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31ஆம் தேதி 'சிக்மா'வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். ‘சிக்மா’ படம் வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com