சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!

சிம்புவின் 51-வது படத்திற்கான டைட்டில் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான "பத்து தல" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இவர் அடுத்தாக, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது. அதனை தொடர்ந்து 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த சூழலில், சொந்தமாக 'அட்மேன் சினி ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு 50-வது பட அறிவிப்பை தனது பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.'பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் 'எஸ்டிஆர் - 49' திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'காட் ஆப் லவ்' திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






