

சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் திரையரங்க ரீ-ரிலீஸில் 1700 நாள்களை நிறைவு செய்துள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது. 2010ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது.
திரைக்கு வந்த 16 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. , சென்னை பி.வி.ஆர் வி.ஆர் திரையில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளாக இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரகுமானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. படத்தின் பாடல்கள் ஒரு வகையில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இன்று வரை இளசுகளின் மனதில் நின்று ஒலிக்கக் கூடிய வகையில் பாடல்கள் அமைந்திருந்தன.
இந்த நிலையில், சென்னை பிவிஆர் அண்ணாநகர் திரையரங்கில் 2021-ல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் தற்போது 1700 நாள்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவே, ரீ-ரிலீஸில் 1500 நாள்களை கடந்த முதல் இந்திய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.