சிங்கீதம் சீனிவாச ராவின் “சிங் கீதம்” படத்தின் டீசர் வெளியானது

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் அயான், ஷாலினி நடித்துள்ள ‘சிங் கீதம்’ படம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சிங்கீதம் சீனிவாச ராவின் “சிங் கீதம்” படத்தின் டீசர் வெளியானது
Published on

தமிழ் சினிமாவில் ‘திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் படத்தை இயக்கியுள்ளார்.

1972ல் வெளிவந்த தெலுங்குப் படமான ‘நீதி நிஜயதி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிங்கீதம். தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கும் அவரது 61-வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘சிங் கீதம்’ என பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீசரில் இப்படத்தை வருகிற ஜூன் 11 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

தன் 94-வது வயதில் சிங்கீதம் சீனிவாச ராவ் தன் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை 3 மாதங்களில் முடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com