ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக பதிவிட்ட பாடகி சின்மயி


ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக பதிவிட்ட பாடகி  சின்மயி
x

இந்தி திரைப்படத் துறையில் ‘சமூகப் பாகுபாடு’ தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் இந்தி தொலைக்காட்சி ஒன்றின் விஜே ஸ்வாதி சதுர்வேதி ஏ.ஆர். ரகுமான் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், "இசை மேதை ஏ.ஆர். ரகுமானின் இந்தக் கருத்து மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவரது தெய்வீக ‘மா துஜே சலாம்’ பாடலை பாடுமாறு அல்லது முணுமுணுக்குமாறு நான் அவரிடம் கெஞ்சிக் கொண்டே இருந்தேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். தங்களுடைய மிகப்பெரிய ஹிட் குறித்து கலைஞர்கள் எப்போதும் இப்படி அடம்பிடிக்கமாட்டார்கள். அதனால், நான் வருத்தப்பட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நவம்பர் 23, 2025 அன்று, புனேவில் நடந்த ஆர் கே லட்சுமணன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சியில் எங்களுடன் சேர்ந்து கோஷமிட்ட கூட்டத்தினரிடையே ஏ ஆர் ரகுமானும் நாங்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடினோம். கிட்டத்தட்ட அனைத்து இசை நிகழ்ச்சியிலும் அவர் மா துஜே சலாம் பாடுகிறார் . இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது தெரியும். ஒருவேளை அவர் தனது குரல் சிறப்பாக இல்லை என்றோ... நீங்கள் அவரை நேர்காணல் செய்த அன்று அவருக்கு பாட விரும்பவில்லை என்றோ பாடாமல் இருந்திருக்கலாம்” என்று பதிலளித்துள்ளார்.

1 More update

Next Story