

சென்னை,
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் என்ற திரைப்படம், கடந்த 18ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த திரைப்படத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
மெர்சல் சர்ச்சைக்கு இடையே பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச். ராஜா "சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். பதிலாக அவருடைய டுவிட்டர் பகுதியில் சமூக வலைதள பயனாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதில் மேலும் சர்ச்சையை உருவாக்கும் வகையில், விஜய் ஒரு கிறிஸ்தவர் என நிரூபிக்கும் வகையில், விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்திரிகை நிறுவனத்திற்கு விஜய் எழுதிய கடிதம் ஆகிய இரண்டையும் பதிவிட்டு 'உண்மை கசப்பானது' என்று ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டார். இதனால் மீண்டும் சர்ச்சை வலுவாகியது. ஹெச். ராஜாவின் கருத்து ஒவ்வொன்றுக்கும் டுவிட்டரில் எதிர்வினை கொடுக்கப்பட்டு வருகிறது. ஹெச். ராஜாவுக்கு பதிலடியாக அவருடைய டுவிட் செய்திக்கு கீழேயே பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள்.
உண்மை கசக்கிறதா என்ற அவருடைய கேள்வி பல தரப்பையும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. திரையுலகை சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஹெச். ராஜாவின் டுவிட்டை இணைத்து பாடகி சின்மயி, தன்னுடைய டுவிட்டர் பகுதியில் அவருக்கு கேள்விகளை எழுப்பி உள்ளார். எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூக வலைதளத்தில் பகிர்வது சட்டப்பூர்வமானதா? இதுபோன்று உண்மையை நிரூபிக்க நாளை ஆதார் அட்டை விபரங்களை வெளியிடுவார்களா? என கேள்விகளை எழுப்பி உள்ளார்.