

எம்.எஸ்.வி, இளையராஜா இசையில் பல அமரத்துவமான பல பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு, திரை உலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பிண்ணனி பாடகி ஜானகி இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். 4 முறை தேசிய விருது பெற்றவர்.
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். 3 வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.
1956-ல் அகில இந்தியா வானொலி இசைப் போட்டியில் ஜனாதிபதியிடம் இருந்து பரிசு பெற்றார். 1959-ல் ராம்பிரசாத்தைத் திருமணம் செய்துகொண்டார்.
1957 -ம் ஆண்டில் வெளிவந்த “விதியின் விளையாட்டு” என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 -ம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மவுன போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார். ௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.
இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வந்த நிலையில், பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதத்தில் காலமானது குறிப்பிடத்தக்கது. முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இளையராஜாவின் பொற்காலம் தமிழ்த் திரையுலகில் ஆரம்பமாகும் முன்பும் சிறப்பான பாடல்கள் பலவற்றைப் தமிழில் பாடியுள்ளார் ஜானகி. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (ஆலயமணி), ராதைக்கேற்ற கண்ணனோ (சுமைதாங்கி), உலகம் உலகம் (உலகம் சுற்றும் வாலிபன்), மலரே குறிஞ்சி மலரே (டாக்டர் சிவா), ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கையொலி (பாசம்) எனப் பல பாடல்களைக் கூற முடியும்.
ஜானகியின் திறமையை முழுவீச்சில் பயன்படுத்திக் கொண்டவர் இளையராஜா எனலாம். முக்கியமாகக் கிராமத்துப் பாடல்களுக்குச் சரியாக உச்சரிப்புடன் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ஜானகி. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியிலேயே 3 பாடல்களைப் பாடினார். ஜானகி பாடிய அன்னக்கிளியே உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா பாடல்கள் இளையராஜாவின் ஆரம்பக் கால வளர்ச்சிக்கும் பெரிதும் உதவின. இளையராஜா எஸ்.பி.பி. -ஜானகி கூட்டணி 80களில் மகத்தான பாடல்களை அளித்தது.
ஏ.ஆர். ரகுமானின் ஆரம்பக் காலகட்டத்திலும் ஜானகி பல பாடல்களைப் பாடியுள்ளார். ஒட்டகத்தைக் கட்டிக்கோ (ஜெண்டில்மேன்), கத்தாழ காட்டு வழி (கிழக்கு சீமையிலே), காதல் கடிதம் கேட்டதும் (ஜோடி), மார்கழித் திங்கள் அல்லவா (சங்கமம்), முதல்வனே (முதல்வன்), நெஞ்சினிலே (உயிரே) போன்ற பாடல்களின் மூலம் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் தன்னுடைய பங்களிப்பை அளித்தார் என்றே சொல்லலாம்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி மகாதேவன், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.பாப்பா, சலபதிராவ், சுதர்சனம், சங்கர் கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.ராஜேந்தர், சிற்பி, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரணி, யுவன்ஷங்கர்ராஜா, தீனா, அனிருத் என அனைத்து ஜாம்பவான்கள் இசையிலும் பாடியுள்ளார். சுமார் 6 தலைமுறை இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமார், சங்கர் -கணேஷ், இளையராஜ இசையில் பாடி உள்ளார் ஜானகி.ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருடன் பணியாற்றி உள்ளார்.
2018-ல் இனிமேல் பாடப்போவதில்லை என அறிவித்தார் ஜானகி. 2016-ல் மலையாளப் படத்துக்காக தாலாட்டு பாடல் ஒன்றைக் கடைசியாகப் பாடினார். எனினும் பண்ணாடி என்கிற படத்துக்காக இரு பாடல்களைப் பாடியதாகத் தகவல் வெளியானது. அப்பாடல்களுக்கு இசையமைத்த ராஜேஷ் ராமலிங்கம், 2012-ல் ஒரு பாடலுக்காக ஜானகியை அணுகியுள்ளார். ஆனால் அப்போது தொண்டையில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் பாட முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் பாடித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜானகி. அதைக் காப்பாற்றுவதற்காக ராஜேஷ் ராமலிங்கம் மீண்டும் அணுகியபோது மறுப்பு சொல்லாமல் பாடிக்கொடுத்துள்ளார்.
எஸ்.பி.பி.யுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ள அவர், எஸ்.பி.பி பாடியதில் தனக்கு பிடித்தது இந்த பாடல்தான் என்று மேடையிலேயே ஒருமுறை அவருக்கு முன்பாகக் கூறியதுடன், அதைப் பாடியும் அசத்தியிருந்தார். அப்போது அவர், ”எஸ்.பி.பி பாடிய பாடல்களில் தனக்கு விருப்பமான பாடல் இதுதான். எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் எத்தனையோ இருக்கிறது. அதிலும், ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்தப் பாடல் முழு ரெக்கார்டிங்கின்போது நான் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டு மிகவும் ரசித்த பாட்டு. அது என்ன பாடல் என்றால் ‘பனி விழும் மலர் வனம்’பாடல். இந்தப் பாடல்தான் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு” என்று கூறிவிட்டு எஸ்.பி.பி குரலில் அந்த பாட்டை ஜானகி பாடி காட்டி அசத்தினார்.
எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது என்று ஜானகி கூறியது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
ஜானகி மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.