ஆஸ்கர் விருது...’டைட்டானிக்’ சாதனையை முறியடித்த ’சின்னர்ஸ்’

ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
சென்னை,
ஆஸ்கர் விருதுகளில் அதிகப்படியான பிரிவுகளில் போட்டியில் உள்ள திரைப்படம் என்ற சாதனையை சின்னர்ஸ் படைத்துள்ளது. 16 பிரிவுகளில் போட்டியில் உள்ள இத்திரைப்படம் முன்னதாக 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.
98வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கும் 'சின்னர்ஸ்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஒலி, சிறந்த விஎப்எக்ஸ், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த நடிகர் தேர்வு என 16 ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் ஆகியுள்ளது.
சின்னர்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ‘மார்ட்டி சுப்ரீம்’, ‘சென்டிமென்டல் வேல்யூ’ மற்றும் ‘ப்ராங்கன்ஸ்டைன்’ ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளைப் பெற்றுள்ளன. ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.






