

சென்னை,
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை. என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை.
“அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி 🙏🏽
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.