'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படத்தின் டீசர் வருகிற 9-ந் தேதி வெளியாக உள்ளது.
'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Published on

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் கடந்த நவம்பர் 10ம் தேதி தொடங்கி வைத்தார். கடல் பின்னனியில் திகில் சாகச படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இப்படத்தின் டீசர் வருகிற 9-ந் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கிங்ஸ்டன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் மகிழ்ச்சி. அன்புள்ள ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இந்த சாகச கற்பனையை பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com