

நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் நடைபெற்று முடிந்தது. பார்க்கிங்’ திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக தற்காலிகமாக ‘எஸ்கே 27’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கயாடு லோஹர், சுதாகர், ஜார்ஜ் மேரியன், விடிவி கணேஷ், மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில், ‘எஸ்கே 27’ பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.