சிறந்த படங்களில் ஒன்றாக “ஸ்லம் டாக்” படம் இருக்கும் - விஜய் சேதுபதி

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிக்கும் ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சிறந்த படங்களில் ஒன்றாக “ஸ்லம் டாக்” படம் இருக்கும் - விஜய் சேதுபதி
Published on

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது.

பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் மற்றும் நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

‘ஸ்லம் டாக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி நடித்த ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியிட்டப்பட்டது.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “சார்மி தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். பூரி ஜெகன்நாத் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு பிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும்.

படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். ” என்றார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com