விசிகவுக்கு சமூக நீதித்துறை: சாத்தியப்படுத்திய விஜய்க்கு நன்றி- பா.ரஞ்சித் பதிவு

சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கு சமூக நீதித்துறை:  சாத்தியப்படுத்திய விஜய்க்கு நன்றி- பா.ரஞ்சித் பதிவு
Published on

சென்னை,

முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்.எல்.) கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்து அரசு அமைக்க உதவிய கட்சியினருக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்துள்ளது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஐயூஎம்.எல். கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்

மனமார்ந்த வாழ்த்துகள்.

இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜெய் பீம்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com