சோனாலி பிந்த்ரே உடல்நிலை குறித்து வதந்திகள்

பம்பாய், காதலர் தினம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை மணந்த இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
சோனாலி பிந்த்ரே உடல்நிலை குறித்து வதந்திகள்
Published on

சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சோனாலி பிந்த்ரே டுவிட்டரில் தெரிவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கினார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து பலரும் வாழ்த்தினர். சோனாலி பிந்த்ரே சிகிச்சைக்காக தனது தலையை மொட்டை அடித்து அந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து மொட்டை தலையில் விக் வைத்த படத்தையும் பகிர்ந்தார். இந்த நிலையில் சோனாலி பிந்த்ரே உடல்நிலை குறித்து திடீர் வதந்தி பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் இது வைரலாகியது. மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ ராம்கதமும் அதனை உறுதிப்படுத்துவதுபோல் தகவலை பதிவிட்டு இருந்தார்.

இதுமேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவறான வதந்தி என்று தெரிந்ததும் ராம்கதம் எம்.எல்.ஏவுக்கு கண்டனங்கள் குவிந்தன. உடனே அந்த பதிவை நீக்கி சோனாலி பிந்த்ரே குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று புதிய பதிவை வெளியிட்டார்.

இந்த நிலையில் சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோல்டி பெல், தயவு செய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைத்தளத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள். தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com