விரைவில் "ரமணா 2" …. "படை தலைவன்" பட விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'படை தலைவன்' படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.
விரைவில் "ரமணா 2" …. "படை தலைவன்" பட விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு
Published on

சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற 23ம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சண்முக பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது,

"ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் அவர்கள் செய்தார்கள். எல்லோரும் விஜயகாந்த் குறித்து பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது.

விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம். மீண்டும் கேப்டனை திரையில் காண்பிப்போம்" என்று பேசியிருந்தார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com