

சென்னை,
சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், சென்சார் குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால் தாமதமானது. இதையடுத்து, படக்குழு நீதிமன்றத்தை அணுகியது. கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் சென்சார் குழுவிடம் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
தற்போது, படம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஆய்விற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
இதற்கிடையில், படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் தொடர்பான வசனங்கள் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பத்திரிகையாளர்களாக வரும் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோர் இடம்பெறும் காட்சிகளில் உள்ள சில வசனங்களை மறுஆய்வுக் குழு நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த காட்சிகளில், நடிகர் விஜயை நோக்கி எழுப்பப்படும் அரசியல் கேள்விகள் இடம்பெற்றிருந்ததால், தணிக்கைக் குழு அவற்றை ‘மியூட்’ செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு எப்போது? என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.