அயன்மேனை மிஞ்சப் போகும் ஸ்பைடர்மேன்

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வல்ஸ் ஸ்டூடியோ உருவாக்கியிருக்கும் அத்தனை கற்பனை கதாபாத்திரங்களும் அட்டகாசமாக இருக்கும்.
அயன்மேனை மிஞ்சப் போகும் ஸ்பைடர்மேன்
Published on

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வல்ஸ் ஸ்டூடியோ உருவாக்கியிருக்கும் அத்தனை கற்பனை கதாபாத்திரங்களும் அட்டகாசமாக இருக்கும். அயன்மேன், ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா, ஆன்ட்மேன், ஹல்க், ஹாக் ஐ, பிளாக் விடோ... என அவெஞ்சர்ஸ் என்ற அதிரடி பட்டாளத்தை களம் இறக்கியிருப்பார்கள். இதில் சிலந்தி மனிதன் எனப்படும் ஸ்பைடர்மேனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பீட்டர் பார்க்கர் என்ற அப்பாவி போட்டோகிராபர் கதாபாத்திரத்திலும் சரி, ஸ்பைடர்மேனாக வலைவிரித்து பட்டையை கிளப்பும் சாகச வீரனாகவும் சரி, திரைப்பட கதா நாயகன் அசத்தியிருப்பார். இதுவரை டோபி மாக்யூரின் நடிப்பில் 4 திரைப்படங்களும், ஆண்ட்ரூ கார்பீல்டின் நடிப்பில் 2 திரைப்படங்களும் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது. இதில் டாம் ஹாலண்ட் என்ற இளம் நடிகர் ஸ்பைடர்மேனாக நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் புதிதாக வலை விரித்திருக்கும் டாம் ஹாலண்ட்டிடம் சில கேள்விகளை பின்ன, அதில் சிக்கிக்கொண்டு பதிலளித்திருக்கிறார்.

ஹாலிவுட்டில் உங்களுடைய முதல் படம்?

2012ம் ஆண்டு வெளியான ஆரியாட்டி என்ற திரைப்படம், என்னை ஹாலிவுட்டில் நடிகனாக அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து தி இம்பாசிபிள், ஹவ் ஐ லிவ் நவ், லாக்கி, இன் த ஹார்ட் ஆப் த சீ, தி மான்ஸ்டர் கால், கேப்டன் அமெரிக்கா என வரிசையாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் தான் என்னை பிரபலமாக்கியிருக்கிறது. கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் 4 நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தேன். இருப்பினும் அந்த காட்சிகளுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிஷன் ஏதாவது நடத்தப்பட்டதா?

5 ஆடிஷன் வைத்துதான் என்னை நடிக்க வைத்தார்கள். இதில் ஏதாவது ஒன்றில் சொதப்பி இருந்தாலும், நடையை கட்டியிருக்கவேண்டும். ஒன்றல்ல.. இரண்டல்ல.. சுமார் 47 பேர் ஆடிஷனில் கலந்துகொண்டனர். 5 வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக நடித்து காண்பித்தோம். சிலரது நடிப்பு என்னுடைய நடிப்பை விட பிரமாதமாக இருந்தது. இருப்பினும் ஸ்பைடர்மேன் உடையை அணிந்துகொண்டு நடிக்கும் வாய்ப்பு எனக்கே கிடைத்தது.

ரசித்து நடித்த தருணங்களைப் பற்றி?

இந்த திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக படமாக்கப்பட்டன. சுவரில் தொங்கியபடி சண்டை, தலைகீழாக நின்று கொண்டு சண்டை, கட்டிடங்களை தாண்டி ஓடுவது, வலையில் தொங்குவது என விதவிதமான ஆக்ஷன் காட்சிகளை ஜாலியாக நடித்துக் கொடுத்தேன். இந்த திரைப்படத்தில்

வசனங்களை விட, சண்டை காட்சிகளே அதிகம். அந்தளவிற்கு இயக்குனர் அதிரடி காட்சிகளை செதுக்கியிருக்கிறார்.

ஆடிஷனில் சுவாரசியமான சம்பவங்கள் நடந்ததா?

ஏன் இல்லை. நிறைய நிகழ்ந்தது. அயன்மேனாக நடித்துகொண்டிருக்கும் ராபர்ட் டவுனி தான் ஆடிஷனுக்கு தலைமை ஏற்றிருந்தார். 5 சுற்றுகளாக நடைபெற்ற ஆடிஷனின் முதல் சுற்று, ஊமை படங்கள். சார்லி சாப்ளினின் திரைப்படங்களில் இருந்து ஒரு காட்சியை நடித்து காண்பிக்க வேண்டும். அதில் சொதப்பி விட, அடுத்த சுற்றான ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருந்தேன். வசனம் பேசுதல், டப்பிங் வேலைகள் என அடுத்தடுத்த சுற்றுகளில் பாஸ் மார்க். அதன்பிறகுதான் ராபர்ட் டவுனியின் அன்பும், ஸ்பைடர்மேன் சூட்டும் கிடைத்தது. ஆடிஷன் முடிந்த சில தினங்களிலேயே கேப்டன் அமெரிக்காவில் இடம் பெற்றிருந்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்ததால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் என்னைப் பாராட்டினார்கள்.

இந்த படத்தில் பீட்டரின் கதாபாத்திரம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது?

பழைய ஸ்பைடர்மேனையும், புதிய ஸ்பைடர்மேனையும் நிறையவே வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய ஸ்பைடர்மேன் உருவாக்கப்பட்டிருக்கிறான். அடுத்தடுத்த படங்களில் அயன்மேனின் சக்திகளையும் மிஞ்சிவிடுவான்.

அடுத்த திரைப்படம் பற்றி?

2018ம் ஆண்டு வெளியாக இருக்கும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான சூட்டிங்வேலைகள் தொடங்கிவிட்டன. இந்த முறை அவெஞ்சர்ஸின் திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன். உண்மையில் என்னுடைய தலைமையில் தான் ஷில்ட் அமைப்பு இயங்க இருக்கிறது.

ஸ்பைடர்மேனின் நண்பனாக வரும் ஹாரி கதாபாத்திரம் இந்த திரைப்படத்திலும் இருக்கிறதா?


இந்த திரைப்படத்தில் என்னுடைய கல்லூரி நண்பனாக ஜான் வாட் நடித்திருக்கிறார். ஆசியாவில் பிரபலமான ஜான், இந்த படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நீங்காத இடம் பிடிப்பார். அவரது நகைச் சுவையான பேச்சும், குறும்புத்தனமான சேட்டைகளும் திரைப்படத்தை சுவாரசியமாக்குகின்றன.

மார்வல்ஸ் கதையில் நடிப்பது பற்றி கூறுங்கள்?


சூப்பர் ஹீரோக்களின் கதை, காமிக் புத்தகமாக வெளிவந்தபோதே ஆர்வத்துடன் வாங்கிப் படித்திருக்கிறேன். என்னுடைய வீட்டில் பாடப் புத்தகங்களை விட, சூப்பர் ஹீரோக்களின் காமிக் புத்தகங்களே அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு சூப்பர் ஹீரோக்களின் ரசிகன் நான். ஆனால் என்னையும் சூப்பர் ஹீரோவாக மாற்றிய பெருமை மார்வல்ஸ் ஸ்டூடியோவையேச் சேரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com