"உளவாளிகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை" - நடிகர் சரத்குமார் பேச்சு

நாட்டுக்காக உயிரை துச்சமாக மதித்து செயல்பட்ட, சொல்லப்படாத வீரர்களின் கதையை படமாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
"உளவாளிகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை" - நடிகர் சரத்குமார் பேச்சு
Published on

சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள படம் 'மிஸ்டர் எக்ஸ்'. ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படம் வருகிற 17ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், "உண்மை சம்ப வங்களை வைத்து படங்கள் தற்போது நிறைய வந்து கொண்டிருக்கின்றன. 170-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளேன். எத்தனையோ கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். நாட்டுக்காக உயிரை துச்சமாக மதித்து செயல்பட்ட, சொல்லப்படாத வீரர்களின் கதையை படமாக்க நிறைய பேர் முன்வர மாட்டார்கள். நாட்டை காப்பாற்ற போராடும் பலரது வாழ்க்கை வெளியே தெரியாது. ஏனெனில் அதை அவர்கள் சொல்லவும் முடியாது.

நாட்டுக்காக, எங்கேயோ இருந்து உளவு பார்த்து, பெற்ற தாயிடமும், கட்டிய மனைவியிடமும் ரகசியத்தை சொல்லாமல் உழைப்பவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அந்த மாதிரியான வீரர்களை, சினிமாக்கள் மூலமாகவே மட்டுமே பாராட்ட முடியும். உண்மையிலேயே அந்த வீரர்களை போற்றுவது நம் கடமை. 'துரந்தர்' மாதிரியான படங்களில் அது நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடருவதும் மகிழ்ச்சி.

ரசிகர்கள் தயவுசெய்து தியேட்டர்களுக்கு சென்று படங்களை பார்க்க வேண்டும். அதுதான் உண்மையான அனுபவம். அதேபோல படம் திரைக்கு வந்து 50 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி.க்கு செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சினிமாவுக்கு இன்னும் நல்லது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com