ஸ்ரீரெட்டி விவகாரம் ராம்கோபால் வர்மாவை கைது செய்யாவிட்டால் நடப்பதே வேறு - பவன் கல்யாண் எச்சரிக்கை

இத்தனைக்கும் காரணமான ராம்கோபால் வர்மாவை கைது செய்யாவிட்டால் நடப்பதே வேறு என நடிகர் பவன் கல்யான் எச்சரிக்கை விடுத்து உள்ளார்
ஸ்ரீரெட்டி விவகாரம் ராம்கோபால் வர்மாவை கைது செய்யாவிட்டால் நடப்பதே வேறு - பவன் கல்யாண் எச்சரிக்கை
Published on

ஐதராபாத்

தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பரபரப்பு பாலியல் புகார்களை கூறி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இதுதொடர்பாக ஸ்ரீரெட்டியை சட்டரீதியாக அணுக சொன்ன பவன்கல்யாணை, கடுமையாக வசைபாடினார் ஸ்ரீரெட்டி. மேலும் அவரது தாயார் பற்றியும் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஸ்ரீரெட்டியை இப்படி பேச வைத்தது தான் தான் என சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறினார். இது பவன் கல்யாண் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று தெலுங்கு பிலிம் சேம்பர் வளாகத்திற்கு வந்த பவன் கல்யாண், அங்கு திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.

ராம்கோபால் வர்மாவை கைது செய்யும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என்று அங்கேயே அமர்ந்தார். இதை அறிந்த பவன் கல்யாண் ரசிகர்களும் சேம்பர் முன் திரண்டனர். போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆர்ப்பாட்டத்தின் போது பவன் கல்யாண் கூறியதாவது:

எனது தாயார் பற்றி ஸ்ரீரெட்டி கூறியதை பல சேனல்கள் ஒளிபரப்பி தங்களது ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன. இதனால் ஏற்பட்ட அவமானத்தை நாங்கள் தான் அனுபவித்தோம். அந்த சேனல்கள் மீது வழக்கு தொடர்வேன், நான் யார் என்பதை விரைவில் அவர்களுக்கு காட்டுவேன். முதலில் என் தாய்க்கு மகன் அதன்பிறகுதான் நடிகர், தலைவன் என்பதெல்லாம் என் தாயின் மானத்தை காக்க முடியவில்லை என்றால் நான் இருப்பதை விட இறப்பதே மேல். என்றார்.

இந்த பேச்சால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த மீடியாக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினார். பின்னர் போலீசார் பவன் கல்யாணை சந்தித்து பேசிய பிறகு அவர் ரசிகர்களை அமைதிப்படுத்தினார். "இத்தனைக்கும் காரணமான ராம்கோபால் வர்மாவை கைது செய்யாவிட்டால் நடப்பதே வேறு" என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் நேற்று திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com