‘சோகங்கள், ஏமாற்றங்கள் நிறைந்த ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை’

டைரக்டர் ராம்கோபால் வர்மா நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘சோகங்கள், ஏமாற்றங்கள் நிறைந்த ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை’
Published on

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பான கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:

நடிகை ஸ்ரீதேவி அழகில் வியந்து அவரை வைத்து படம் எடுக்கும் லட்சியத்தில்தான் நான் டைரக்டராகவே ஆனேன்.

அவருடன் 2 படங்களில் பணியாற்றி இருக்கிறேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கையை நான் அறிவேன். அழகானவர், வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை, திறமையான நடிகை. 20 ஆண்டுகள் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் என்றெல்லாம் அவரை கொண்டாடுகிறார்கள்.

ஆனால் ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை சோகங்களும், ஏமாற்றங்களும், கண்ணீரும் நிறைந்தது. சந்தோஷமாக அவர் வாழவில்லை. அப்பா இருந்தவரை சந்தோஷமாக இருந்தார்.

அந்த நாட்களில் வருமான வரி துறைக்கு பயந்து சம்பளத்தில் பெரும்பகுதியை நடிகர், நடிகைகளுக்கு கருப்பு பணமாகத்தான் கொடுப்பார்கள். ஸ்ரீதேவி சம்பளமும் அப்படித்தான் வந்தது.

அந்த பணத்தை அவருடைய தந்தை வருமான வரி அதிகாரிகளுக்கு தெரியாமல் நண்பர்கள், உறவினர்களிடம் கொடுத்து வைத்து இருந்தார். ஆனால் அந்த உறவினர்கள் ஸ்ரீதேவியின் தந்தை இறந்ததும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.

பிறகு தாயின் பாதுகாப்பில் ஸ்ரீதேவி இருந்து வந்தார். சம்பாதித்ததை

எல்லாம் பத்திரப்

படுத்த இருவரும் நிலம், வீடு என்று அசையா சொத்துகளில் முதலீடு செய்தார்கள்.

ஆனால் அந்த சொத்துகள் வில்லங்கமானவை என்று பிறகுதான் தெரிந்தது. அவை மொத்தமாக பறிபோய் விட்டன.

போனிகபூரை சந்தித்தபோது அவர் கையில் எதுவுமே இல்லை. சம்பாதித்ததை எல்லாமே மற்றவர்கள் அபகரித்து விட்டனர். போனிகபூரும் அப்போது கடனில்தான் இருந்தார். ஸ்ரீதேவியின் தாய்க்கு வெளிநாட்டில் தவறான சிகிச்சை அளித்து மனநிலை பாதித்தது.

அப்போது சொத்துகளை கேட்டு ஸ்ரீதேவிக்கு எதிராக அவரது சகோதரி வழக்கு தொடர்ந்தார். இதனால் வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணாகவே ஸ்ரீதேவி ஆகிவிட்டார். போனிகபூரின் முதல் மனைவி வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக அவரது அம்மா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஸ்ரீதேவியின் வயிற்றில் ஓங்கி குத்திய சம்பவமும் நடந்தது.

இப்படி சொந்த வாழ்க்கையில் ஸ்ரீதேவி கடைசிவரை நிம்மதி இல்லாமல்தான் இருந்தார். படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் அவர் சோகத்தில்தான் மூழ்கி இருந்தார்.

இவ்வாறு ராம்கோபால் வர்மா கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com