

சென்னை,
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
சமீபத்தில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிலம்பரசன் அறிவித்திருந்தார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 'அரசன்' படத்தில் சிலம்பரசனின் கதாபாத்திரம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையாவின் மகனாக எஸ்டிஆர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கதையின் தொடக்கத்தில், எஸ்டிஆர் சிறுவனாக இருக்கும் காலகட்ட காட்சிகளில் ஆண்ட்ரியா அவரது தாயாக தோன்றுவார் என்றும், பின்னர் அவர் கேங்ஸ்டராக உருவாகும் வகையில் கதைக்களம் நகரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 'வடசென்னை' மற்றும் 'அரசன்' திரைப்படங்களுக்கு இடையே சுவாரஸ்யமான தொடர்பை இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.