

கோவா,
‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், படத்தின் 2-ம் பாகத்தை இந்து அமைப்பினரிடம் போட்டுக் காட்டிவிட்டு, அதன் பிறகே திரையிட வேண்டும் என்று ‘இந்து ஜனாகிருதி சமிதி’ அமைப்பின் தலைவர் மனோஜ் சோலன்கி தெரிவித்துள்ளார்.
இதிகாசங்கள்
வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ மற்றும் வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ ஆகிய 2 இதிகாசங்களும், வெறும் புராணக் கதைகளாக மட்டுமின்றி, இந்திய மக்களின் வாழ்வியல், கலாசாரம், மத நம்பிக்கை ஆகியவற்றை வடிவமைத்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பியங்களாக திகழ்கின்றன.
பல்வேறு வடிவங்கள்
இந்த இரண்டு இதிகாசங்களும் எழுத்து வடிவமாகவும், வாய் வழிக் கதைகளாகவும், மேடை நாடகங்களாகவும், தெருக்கூத்துக் கலைகளாகவும் மக்களிடையே பரவி வந்துள்ளன. இதன் காரணமாக இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள் சொல்லப்பட்டு வருவதை இன்று நம்மால் காண முடிகிறது.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு இதிகாசக் கதைகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. அவ்வாறு எடுப்பவர்கள் அந்த இதிகாசங்களின் மூலக்கதை மட்டுமின்றி, அதன் பிற வடிவங்களையும் சேர்த்து படமாக்கியுள்ளனர்.
‘ராமாயணா’ திரைப்படம்
அந்த வகையில், இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் 2 பாகங்களாக உருவாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
‘இன்டர்ஸ்டெல்லார்’ போன்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய டி.என்.இ.ஜி.(DNEG) நிறுவனம், ‘ராமாயணா’ படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதோடு, ஆஸ்கார் விருதுகளை வென்ற 2 இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
வசூல் சாதனை
உலகம் முழுவதும் சுமார் 40 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வெளியான 13 நாட்களில் இதுவரை ரூ.1,483 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இன்னும் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், அதன் வசூல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
விமர்சனங்கள்
இதனிடையே, ‘ராமாயணா’ படம் வெளியானதில் இருந்தே இந்த படம் மீது சில தரப்பினர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறனர். இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இருப்பதைப் போல், ராவணனை கொடிய அசுரனாக இந்த படம் சித்தரிக்கவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவு
அதே சமயம், இந்த படம் தொடங்கும் போதே, இக்கதை வால்மீகி ராமாயணம் மட்டுமின்றி, பல்வேறு ராமாயண வடிவங்களையும் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, “ராவணனை அழிக்க பகவான் விஷ்ணு அவதாரம் எடுத்து வருகிறார் என்றால், ராவணன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருந்திருக்க வேண்டும்? எனவே ராவணனின் கதாபாத்திரத்தை இவ்வாறு சித்தரிப்பது சரியானதே” என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
இந்து அமைப்பின் எதிர்ப்பு
இந்த நிலையில், கோவாவைச் சேர்ந்த ‘இந்து ஜனாகிருதி சமிதி’ என்ற இந்து அமைப்பினர், ராமாயணா படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மனோஜ் சோலன்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமாயணா’ திரைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகவும், தணிக்கை வாரியம் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தி மெசஞ்சர் ஆப் காட்(Messenger of God), தி டாவின்சி கோட்(The Da Vinci Code) போன்ற படங்கள் வெளியானபோது சம்பந்தப்பட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், இந்துக்களின் உணர்வுகளுக்கு மட்டும் ஏன் மதிப்பு அளிக்கப்படுவதில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராவணனின் சித்தரிப்பு
சீதையை கடத்திச் சென்ற ராவணனை இந்த படத்தில் பெண்களின் பாதுகாவலனாகவும், ஒடுக்கப்பட்ட மக்களை காப்பவனாகவும் காட்டியிருப்பது மிகவும் தவறானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சூர்ப்பணகையின் மூக்கை அறுத்த லட்சுமனனை சீதை கண்டிப்பது, கரன் மற்றும் தூஷணன் ஆகிய அசுரர்களிடம் ராமர் மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் வால்மீகி ராமாயணத்தை மாற்றி, தற்கால கருத்துகளை திணிக்கும் வகையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சீதையின் சுயம்வரத்தில் ராவணன் பங்கேற்றதாக மூலக்கதையில் ஒரு காட்சி இருப்பதாகவும், ஆனால் அது திரைப்படத்தில் காட்டப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள அவர், தியாகத்தின் உருவமாக திகழும் லட்சுமணனை, முன்கோபக்காரராகவும், கேலிப்பேச்சு பேசுபவராகவும் காட்டியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
அதோடு, இந்த படம் கம்யூனிச சித்தாந்தத்தை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்துக்கள் ‘ராமாயணா’ படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ‘ராமாயணா’ படத்தின் 2-ம் பாகத்தை இந்து அமைப்பினரிடம் போட்டுக் காட்டிவிட்டு, அதன் பிறகே திரையிட வேண்டும் என்று வலியுறுத்திய சோலன்கி, 2-ம் பாகத்தில் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருந்தால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.